கோவையில் நடைபெற உள்ள ஒற்றுமை ஓட்டம்- விவரங்கள் இதோ…

கோவை: கோவையில் ஒற்றுமை ஓட்டம் எனும் Unity March Rally நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘எனது இளைய பாரதம்’ அமைப்பின் சார்பில் நவம்பர் 20ஆம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 150ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்டமாக ஒற்றுமை ஓட்டம் எனும் Unity March Rally நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த, எனது இளைய பாரதம் அமைப்பின் மாவட்ட இளைஞர் அலுவலர், ஜோயல் பிரபாகர் பேசியதாவது, ‘நாடு முழுவதும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வரும் 20ம் தேதி ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

இதில் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கலந்து கொள்ளலாம். mybharath.gov.in என் இணையதளத்தில் பதிவு செய்து இதில் பங்கேற்கலாம். 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 6ம் தேதி மத்திய அமைச்சர் மன்சுக் மான்டவியா my Bharat portal-யை அறிமுகம் செய்தார். அதில் வினாடி வினா, இன்ஸ்டா ரீல் தயாரிப்பு, கட்டுரை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து இளைஞர்கள் டிஜிட்டல் வழியாக அதில் பங்கேற்றனர். மேலும் கல்லூரிகளில் இயங்கும் என்எஸ்எஸ் அமைப்பின் மூலமாக பேச்சுப்போட்டி மற்றும் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பிரம்மாண்ட நிகழ்ச்சியாக டிசம்பர் 6ஆம் தேதி அன்று குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலை முன்பு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

Recent News

Video

Join WhatsApp