கோவை:கோவை எல்லையில் கடந்த 2 மாதங்களில் ரூ.75.40 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. பஸ்களில் குருவிகளாக வருபவர்கள் தப்பித்து விடுவதாகவும், 6 சோதனை சாவடிகளில் தீவிரமாக கண்காணிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தமிழக – கேரளா எல்லையாக கோவை, பாலக்காடு இருந்து வருகிறது. தொழில் நகரமாக கோவையில் தங்க நகை தொழிலும் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்த நிலையில் கேரளாவில் இருந்து கோவைக்கு ஹவாலா பணம் கடத்தி வருவதும், கோவையில் இருந்து கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்தி செல்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இதனைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் ஹவாலா பணத்தைக் கடத்தும் கும்பல் ஒவ்வொரு முறையும் தங்களது கடத்தல் முறையை மாற்றி வருகின்றனர்.
ஆனாலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றும் இந்த மாதம் என 2 மாதத்தில் ரூ. 75 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 2.5கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
ஹவாலா பணம் கடத்தலைத் தடுக்க மாவட்ட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கண்காணித்து வருகின்றனர். கோவை – கேரளா எல்லைகளாக உள்ள கேஜி சாவடி எட்டிமடை, வாளையார், வேலந்தாவளம், வீரப்பகவுண்டனூர், நடுப்புனி, பொள்ளாச்சி கோபாலபுரம் அகிய இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளன.


அனைத்து சோதனைச் சாவடிகளிலும் 3 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரிய சோதனை சாவடியான வாளையாரில் மட்டும் 5 முதல் 6 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கேஜி சாவடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எட்டிமடை சோதனை சாவடியில் 2ம் தேதி ரூ.26 லட்சத்து 40 ஆயிரம், 19ம் தேதி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 2 கிலோ 500 கிராம் வெள்ளி, 31ம் தேதி ரூ.22 லட்சம் றிமுதல் செய்யப்பட்டுள்ளத
கடந்த 6ம் தேதி ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் என 2 மாதத்தில் ரூ. 75 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹவாலா பணத்தை கடத்துபவர்கள் வெளி நாட்டு தங்கம் மற்றும் தங்க கட்டிகளை கொண்டு வந்து கோவையில் ஒரு சிலரிடம் விற்று அதனை ஹவாலா பணமாக மாற்றி கடத்தி செல்கின்றனர்.
கடத்தல் குருவிகள்
இரு சக்கர வாகனம், கார்களில் கடத்தி வருபவர்கள் 90 சதவீதம் பேர் சோதனையில் சிக்கி கொள்கின்றனர். பஸ்களில் கடத்தி வருபவர்கள் 99 சதவீதம் தப்பி விடுகின்றனர். ரயில் மூலம் கடத்துபவர்களும் அதிகம் சிக்குவது இல்லை.
பஸ்களில் தொடர்ச்சியாக சோதனை செய்ய முடியாது. அது பயணிகளை பாதிக்கும். பஸ் கண்டக்டர்களுக்கு சந்தேக நபர்கள் குறித்து போலீசாரிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல ஹவாலா கடத்தல்காரர்கள் பணத்தை கடத்துவதை ஒவ்வொரு முறையும் மாற்றி கொண்டே இருப்பார்கள். ஒரு முறை பைக், ஒரு முறை கார், பஸ், ரயில் என மாற்றி கொள்வார்கள். இந்த கடத்தல் காரர்கள் குருவிகளாகவே செயல்படுகின்றனர். கடத்தல் பணத்திற்கேற்ப ஒரு கமிஷனை பெற்று கொள்கின்றனர்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


