கோவை: பெண் தோழியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட
தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலிக்கோணம் பாளையம் அருகே உள்ள தச்சன் தோட்டம், வடக்கு தெருவை சேர்ந்தவர் முகேஷ் குமார் (வயது 24). இவர் சூலூரில் உள்ள தனியார் டி.வி. மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு சிங்காநல்லூர் அரவான் கோவிலுக்கு அவர் தனது பெண் தோழியுடன் சென்றார். அப்போது அவருக்கு ஏற்கனவே தெரிந்த மணி என்ற போண்டாமணி மற்றும் அவரது நண்பர்கள் முகேஷ் குமாரின் பெண் தோழியை கிண்டல் செய்துள்ளனர்.
எதனால் ஆத்திரம்டைந்த முகேஷ் குமார் அவர்களை தட்டிக்கேட்டார்.
மேலும், தோழியை அங்கிருந்து அனுப்பிவிட்டு தானும் வீடு திரும்பினார்.இதனிடையே சிங்காநல்லூர் போயர் தெருவில் உள்ள கடையின் பின்புறம் முகேஷ் குமார் அவரது நண்பர்களான கார்த்திக் மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த போண்டாமணி மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் முகேஷ் குமாரை தாக்கி கத்தியால் குத்தினர். மேலும், அவரது நண்பர்களும் தாக்கப்பட்டனர். காயமடைந்தவரகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து முகேஷ் குமார் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் மணி என்ற போண்டாமணி மற்றும் பள்ளபாளையம் பத்ரிநாத்(22), சூலூர் கூலிக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி ( வயது 18) பாப்பம்பட்டி மாதவன் (வயது 18) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான போண்டாமணியை தேடி வருகின்றனர்.


