கோவை: கோவையில் மாணவி கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய 3 பேருக்கு டிஎன்ஏ மற்றும் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சகோதரர்கள் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரியை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்பசாமி(30), காளி என்கிற காளீஸ்வரன்(21), இவர்களது உறவினர் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்.
அவர்களை மாணவி அடையாளம் காட்டி உறுதி செய்தார். இந்நிலையில், நேற்று கோவை அரசு மருத்துவமனையில் 3 பேருக்கும் தடயவியல் துறையினர் டிஎன்ஏ மற்றும் ஆண்மை பரிசோதனை செய்தனர். போலீசார் கூறுகையில்,
“3 பேருக்கும் டிஎன்ஏ மற்றும் ஆண்மை பரிசோதனை செய்ய கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளின் முடிவுக்காக சென்னை தடயவியல் துறை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அதன் ரிசல்ட் கிடைத்துவிடும். இது இந்த வழக்கு விசாரணையில், முக்கிய ஆதாரமாக கருதப்படும்,’’ என்றனர்.


