கோவை: திமுக அரசின் திட்டங்கள் தேர்தலை குறிவைத்து அல்ல என்று எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை விரிவாக்க நிகழ்ச்சியின் வெல்லும் பெண்கள் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக கோவையில் ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்திலும் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் எம்பி திருச்சி சிவா, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர மூர்த்தி, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கோவை மேயர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்பி திருச்சி சிவா, கலைஞர் மகளிர் உரிமை திட்டம் இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகத்தில் முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல் 2023 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளில் இந்த திட்டத்தை துவக்கினார் என்றும் முன்பிருந்த ஆட்சியில் நிதி பற்றாக்குறை வைத்துவிட்டு சென்ற காரணத்தினால் அதனை சரி செய்து இந்த திட்டங்களை துவங்கினோம் என்றார்.
தமிழ்நாட்டில் 1 கோடியே 14 லட்சம் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் இந்த உரிமை தொகையை பெற்று வருகிறார்கள் என்றும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பெண்களும் 28 ஆயிரம் ரூபாய் தற்பொழுது வரை பெற்றுள்ளார்கள் என்றும் கூறிய அவர் அதனை தொடர்ந்து பல்வேறு மகளிர் முன்வைத்த கோரிக்கைகளை தொடர்ந்து ஜூலை மாதம் முகாம்கள் நடத்தி அதன் அடிப்படையில் மீண்டும் தகுதி உள்ள மகளிர்க்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது என்றார்.
இந்த முறை 17 லட்சம் மகளிர்க்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது இது சராசரி குடும்ப பெண்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்றார்.ப்பெண்களை உயர்த்தினால் சமுதாயம் உயரும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாடு தற்போது அனைத்து வகையிலும் முன்னோங்கி நிற்கிறது.
டெல்லியில் செயல்படும் நிதி ஆயோக் என்ற அமைப்பு அரசு நலதிட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்று கூறுகிறார்கள் என்றார்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது என்கின்ற நிலை மாறி உயரத்தின் உச்சியை தொடலாம் என்று வாழ்ந்து வருகிறார்கள் என்றால், பெரியார் விரும்பிய புரட்சி பெண் என்பதன் வளர்ச்சி தான் என்றும் அதனை திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
கோவையில் மட்டும் 4 லட்சத்து 25 ஆயிரத்து 705 மகளிர் இந்த திட்டத்தில் பயன்பெற்றுள்ளார்கள் கூடுதலாக இன்று 1600 பேர் இந்த திட்டத்தில் பயன்பெறுகிறார்கள் என்று கூறிய அவர் பல இடங்களை ஒப்பிடுகின்ற பொழுது கோவை அதிகமான எண்ணிக்கையாகும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக கூறினார்.
கூடுதலாக மகளிர் உரிமைத் தொகை வழங்குவது, பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் திட்டம் ஆகியவை எல்லாம் தேர்தலுக்காக தான் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்து குறித்தான கேள்விக்கு இந்த திட்டம் துவங்கிய 2023 என்பது தேர்தலுக்கான காலம் கிடையாது இது அப்பொழுதே தொடங்கப்பட்ட திட்டம்.
மேலும் மகளிர்காக விடியல் பயணம் திட்டம் என்பது எல்லாம் தேர்தலை குறி வைத்து நாங்கள் அறிவித்த திட்டங்கள் அல்ல பெண்களை சமுதாயத்தில் முன்னேற்றுவதற்காக ஆகும், அவர்கள் ஏதாவது பேச வேண்டும் என்று பேசுகிறார்கள் நாங்கள் எங்களுடைய கடமைகளை செய்து வருகிறோம் என்று பதில் அளித்தார்.
அமலாக்கத்துறை சோதனைகள் குறித்தான கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.



