கோவை: கோவை பைபாஸ் சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தேசிய நெடுஞ்சாலை எண் 544-ல் (பழைய 47)-ல் அமைந்துள்ள கோவை பைபாஸ் சாலையை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஆலோசகர் லீனா நாயர் தலைமை தாங்கினார். கலெக்டர், வருவாய்த் துறை, மற்றும் பல்வேறு பயன்பாட்டு நிறுவனங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் டிபிஆர் ஆலோசகர் ஜீயோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் கீழ், கி.மீ. 144.680 முதல் 170.880 வரை, மொத்தம் 26.200 கி.மீ. நீளத்தில் உள்ள கோவை பைபாஸ் சாலை, 6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக, 15 கட்டமைப்புகள் (மேம்பாலங்கள், வாகன அடிப்பாதைகள் உள்ளிட்டவை) மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், சாலையின் இரு பக்கங்களிலும் முழு நீளத்திலும் சேவைச் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சாலைப் பணிகளை சீராக மேற்கொள்ள, எரிவாயு குழாய்களை சாலை உரிமைப் பரப்பின் ஓரத்திற்கு மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட பயன்பாட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சாலை எல்லை குறியிடுதல் மற்றும் கூடுதல் நிலத் தேவை (சுமார் 15 ஹெக்டேர்) தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
மேலும், டிடபிள்யூஏடி, மின்சார வாரியம் உள்ளிட்ட பயன்பாட்டு நிறுவனங்கள், தங்களின் பயன்பாட்டு மாற்ற மதிப்பீடுகளை விரைவாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டன.
இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ.1,800 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டிலேயே திட்டம் ஒப்பந்தமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

