கோவை: கோவையில் பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எடுத்த கூறும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கோவை டவுன்ஹல் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தத்ரூபமாக மாட்டு தொழுவம் அமைக்கப்பட்ட குழந்தை இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பை எடுத்து கூறும் விதமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து அவதரித்த மாட்டுத் தொழுவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் குழந்தை இயேசு உருவபொம்மையை பக்தர்களுக்கு உயர்த்திக் காட்டி இயேசு பிறப்பை அறிவித்தார். பின்னர் அந்த உருவபொம்மை குடிலில் வைக்கப்பட்டு ஆராதனைகள் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டதாக ஆயர் தாமஸ் ஆக்வினஸ் தெரிவித்தார்.
இதைப்போலவே புளியகுளம், காந்திபுரம், ஆவாரம்பாளையம், திருச்சி சாலை என அனைத்து பகுதிகளிலும் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது.

