கோவை: தேர்தலுக்கு இன்னும் மூன்று மாத காலங்கள் உள்ள நிலையில் பொறுத்திருப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வாஜ்பாயின் பிறந்தநாளை நல்லாட்சி தினமாக பிரதமர் அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சிறந்த சமூக சேவை செய்பவர்களை தேர்ந்தெடுத்து பாஜக சார்பில் நல்லாட்சி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நல்லாட்சி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 6 பேருக்கு விருதுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வாஜ்பாய் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் கோவையில் முதல் முறையாக இந்த விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார். கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றதை குறிப்பிட்ட அவர் பாஜக சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
அண்மைக்காலமாக அரசு பேருந்துகள் விபத்திற்கு உள்ளாவது ஆச்சரியமாக இருப்பதாகவும் இந்திய அளவில் விபத்து நடைபெறும் மாநிலத்தில் தமிழ்நாடு முதல் மாநிலம் உலக அளவில் இந்திய நாடு தான் விபத்தில் முதல் நாடு என்று தெரிவித்தார். கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக அரசு பேருந்துகள் விபத்திற்குள்ளாவதை பார்த்து வருகிறோம், தமிழகத்தில் அரசு பேருந்துகள் எல்லாம் ஆடிட் செய்ய வேண்டிய நிலை வந்து விட்டது அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்கிறார்களா? அல்லது தமிழ்நாடு போக்குவரத்து கழகம் இழப்பில் சென்று கொண்டிருப்பதால் வழக்கமாக செய்ய வேண்டிய சோதனைகளுக்கு கூட செய்யாமல் விட்டு விட்டார்களா? என்று கேள்வி எழுப்பிய அவர் அரசு பேருந்துகள் அதிகமாக தீப்பிடிக்கிறது எதிர்புறம் வரும் கார் இடித்து 9 பேர் இறக்கிறார்கள் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார். எனவே அனைத்து அரசு பேருந்துகளையும் ஆடிட் செய்து மீண்டும் தர சான்றிதழை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஒடிசா அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது ஏற்பட்ட கலவரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அது மிகவும் துர்திஷ்டவசமானது கிறிஸ்துமஸ் கொண்டாடும் குழந்தைகளை சில நபர்கள் தடுத்து நிறுத்தியது மிகப்பெரிய குற்றம் . இதெல்லாம் விரும்பத் தகாத ஒரு செயல் என்றும் வருந்தத்தக்க செயல் என்றும் தெரிவித்தார். இதை யார் செய்திருந்தாலும் அந்தந்த இடத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் இதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
பாஜக அதிமுக கூட்டணியில் எத்தனை சீட்டுகள் வழங்கப்படும் என்று ஒரு உத்தேச பட்டியல் வெளியானது தொடர்பாகவும் அது குறித்து தேமுதிக பிரேமலதா தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கும் பதில் அளித்த அவர், நான் எந்த மீட்டிங்கிலும் இல்லை அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவே அதை பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது அப்படிப்பட்ட எந்த கூட்டத்திற்கும் நான் செல்லவில்லை என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது எனவே நான் கருத்து கூறுவது என்பது தவறாக போய்விடும் என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி மீது கண்டனத்திற்குரிய கருத்தை மீண்டும் பன்னீர்செல்வம் வைத்திருப்பது குறித்தான கேள்விக்கு, டெல்லி பகூத் தூரே என்ற ஹிந்தி வசனத்தை குறிப்பிட்டுடெல்லி மிகவும் தூரமாக இருக்கிறது அதுபோன்று தமிழ்நாடு தேர்தலும் தூரமாக இருக்கிறது தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இடையில் உள்ளது எனவே தேசிய ஜனநாயக கூட்டணியின் வலிமை என்ன என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்தார்.
மேலும் பிரேமலதா விஜயகாந்த், டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரெல்லாம் நல்ல முடிவாக எடுப்பார்கள் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வலிமையாக வந்து வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் பொறுமை காப்போம் நேரம் இருக்கிறது என்று தெரிவித்தார்.
தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் தான் உள்ளது, எனவே வேகமாக வேலை செய்ய வேண்டும் என்று திமுக கூறி வருவது தொடர்பான கேள்விக்கு, தோற்கப் போகிற அவர்களுக்கு அந்த பயம் வரும் திமுகவை பொருத்தவரையில் 100 நாட்கள் தான் ஆட்சியில் இருக்கப் போகிறார்கள்.
SIR யில் இருந்தே அவர்கள் பயத்தில் தான் இருக்கிறார்கள், 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் நியாயமான முறையில் தேர்தல் கமிஷன் அவர்களை நீக்கி உள்ளார்கள் சில தவறுகள் இருக்கலாம் ஆறு கோடிக்கு மேல் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் பொழுது சில தவறுகள் நடப்பது சகஜம் தான் அப்படி இருக்கும் பொழுது தேர்தல் ஆணையம் முன் நின்று யாராவது நியாயமானவர்கள் நீக்கப்பட்டிருந்தால் அவர்களை சேர்க்க வேண்டும் ஆனால் அந்த ஓரிரு வாக்காளர்களை வைத்துக் கொண்டு திமுகவினர் அதனை பெரிதாக்கி வருகிறார்கள் என தெரிவித்தார்.
திமுகவினர் இன்னும் கடைசி 100 நாட்கள் ஆட்சியில் இருக்கப் போகிறார்கள் என தெரிவித்த அவர் திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன் என்பார்கள் ஆனால் திமுகவை பொருத்தவரை ஆட்சி முடியக்கூடிய கடைசி காலம் ஹனிமூன் ஆக இருக்கிறது என விமர்சித்தார். இன்னும் ஒரு நாட்களில் அந்த ஆட்சி தூக்கி எறியப்படுவது உறுதி என்றும் தெரிவித்தார்.
மத அரசியல் செய்வது யார் என்று முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பிய அவர், கிறிஸ்துமஸ், ஈது, தீபாவளி என்று அனைத்திற்கும் நாங்கள் வாழ்த்து கூறுகிறோம் பிரதமர் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறார் அப்படி இருக்கும் பொழுது அவர் மத அரசியல் செய்கிறாரா அல்லது தீபாவளிக்கு வாழ்த்து கூறாமல் கிறிஸ்துமஸ் மற்றும் ஈது பண்டிகைக்கு முதல் ஆளாக செல்லும் முதல்வர் மத அரசியல் செய்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.
தஞ்சாவூர் அரண்மனையில் வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் பொழுது இந்த முறை அழைத்ததால் திமுகவினர் செல்லவில்லை என்றும், அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் கிறிஸ்துமஸ் விழாவில் யார் முதலில் பிளம் கேக் சாப்பிடுவது என்று போட்டி என்று விமர்சித்தார். நாங்கள் எப்பொழுதும் மத அரசியல் செய்யவில்லை என்றும் கிறிஸ்துமஸ் விழாவில் யாராவது மத அரசியல் செய்தால் அதனையும் கண்டிப்பதாக தெரிவித்தார்.
எங்களைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் ஜெயிக்க வேண்டும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது மட்டும்தான் ஒரே இலக்கு என்று தெரிவித்தார். பியூஸ் கோயல் தமிழகத்திற்கு வருகை புரிந்து பல்வேறு கட்சிகளுடன் பேசியிருக்கின்றார் பொறுத்திருப்போம் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என தெரிவித்தார். அனைத்து கட்சிகளும் மரியாதையாக நடத்தப்பட்டு ஆட்சி கட்டிலில் அமரும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
பாஜக வளர்ந்துள்ள அளவிற்கு சீட்டுகளை எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு, பாஜகவை பொறுத்தவரை தலைவர்கள் அனைவரும் பூத்தை வலிமைப்படுத்தி இருக்கின்றோம் தமிழகத்தில் 50 ஆயிரம் என்பதை தாண்டி பூத் லெவல் ஏஜெண்டுகள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.
அனைத்து கட்சிகளுடன் பூத் அளவில் போட்டி போடும் இயக்கமாக இருக்கின்றோம் என்றார். பாஜகவின் வலிமை என்பது எங்களுக்கு தெரியும் பாஜகவின் வலிமை என்பது மற்ற கட்சிகளுக்கும் தெரியும் என்று தெரிவித்த அவர் எனவே பொறுமையாக இருப்போம் அனைத்து கட்சிகளின் மீதும் மரியாதை உள்ளது நம்முடைய ஒற்றை இலக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழக காவல் துறையினர் அண்மைக்காலமாக பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், காவல்துறை தற்பொழுது அதிகமான மன அழுத்தத்தில் வேலை செய்து வருவதாகவும் அனைவரும் கிண்டல் அடிக்கிறார்கள் ஆனால் அண்ணாமலை வந்தாலே காவல்துறையை சப்போர்ட் செய்து தான் பேசுவார் என தெரிவித்தார்.
அனைத்து துறைகளிலும் கருப்பு ஆடுகள் இருப்பார்கள் காவல்துறையிலும் கருப்பு ஆடுகள் உள்ளார்கள் ஆனால் காவல்துறையில் தண்டனை என்பது மிகக் கடுமையாக இருக்க வேண்டும் சீருடைகள் இருக்கும் பொழுதே ஒருவர் தவறு செய்தால் Exemplary Punishment ஆக இருக்க வேண்டும் என தெரிவித்தார். காவல்துறை கடுமையான பணிச்சுமையில் இருப்பதாக தெரிவித்தார்.
அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு மீண்டும் டெல்லி பகூத் தூரே என பதிலளித்தார்.

