கோவையில் கடந்தாண்டு பதிவான குற்ற வழக்குகள் எத்தனை? கோடிகளில் பொருட்கள் மீட்பு!

கோவை: கோவை மாநகரில் கடந்தாண்டு திருட்டு, கொள்ளை போன ரூ.7.35 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பெண்கள் சமந்தமான வழக்கில் 100 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் கடந்தாண்டு பதிவான வழக்குகள் விவரம் குறித்து மாநகர போலீசார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகரில் கடந்த 2025ம் ஆண்டு ஒரு ஆதாய கொலை நடந்துள்ளது. அதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வழிப்பறி வழக்குகளில் 14 வழக்குகளும், 36 வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை வழக்குகளில் 29 வழக்குகளும், 100 இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை வழக்குகளில் 67 வழக்குகளும், 477 திருட்டு வழக்குகளில் 305 வழக்குகளிலும், மற்ற குற்றசம்பவங்களில் 75 வழக்குகளில் 70 வழக்குகளும் என மொத்தம் 704 வழக்குகளில் 486 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ரூ. 8 கோடியே 79 லட்சத்து 60 ஆயிரத்து 390 மதிப்புள்ள பொருட்களில் ரூ. 7 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரத்து 550 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 23 கொலை வழக்குகளில் 23 பேரும், 25 கொலை முயற்சி வழக்குகளில் 25 பேரும், 15 கலவரத்தை ஏற்படுத்திய வழக்குகளில் 15 பேரும், 283 அடி- தடி வழக்குகளில் 278 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கடந்த 2 ஆண்டுகளும் 100 சதவீதம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல கொலை வழக்கில் 21 பேருக்கும், ஆதாய கொலையில் ஒருவருக்கும், வழிப்பறி வழக்கில் 11 பேருக்கும், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த 30 பேருக்கும், கொலை முயற்சி வழக்கில் 9 பேருக்கும் கோர்ட்டில் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு 1927 பிடிவாரண்ட் பெறப்பட்டு 1464 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பழிப்பு வழக்கில் 4 பேரும், 23 துன்புறுத்தல் வழக்கில் 23 பேரும், 201 பெண்கள் வண்கொடுமை சட்ட வழக்கில் 201 பேரும், 58 விபசார வழக்கில் 58 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்கள், கணவன் மற்றும் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட 16 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதன் படி கடந்த ஆண்டு 100 சதவீத வழக்குகள் முடித்து வைக்கபட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

கடந்தாண்டு 190 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 வழக்குகளுக்கு தண்டணை வாங்கி தரப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தில் ரவுடிகள் 70 பேரும், மோசடி நபர்கள் 33 பேர், பாலியல் குற்றவாளிகள் 28 பேர், போதை பொருள் வியாபாரிகள் 64 பேர், சைபர் கிரைம் 8 பேரும், மற்ற குற்றங்களில் ஈடுபட்ட 13 பேர் என மொத்தம் 216 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2024ம் ஆண்டு 133 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்தாண்டு 216 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி 50 சதவீதம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு சட்டத்தில் 626 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூராக இருந்த ஏ, ஏ பிளஸ் ரவுடிகள் 173 பேர் கோவை மாநகரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News

Video

Join WhatsApp