கோவை: மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் பயோ-மெட்ரிக் சாதனங்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சி 86வது வார்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு உள்ள ஒரு அறையில் ஊழியர்களின் வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் சாதனங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்வதற்கான பேட்டரிகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் மேற்பார்வையாளர் காளியப்பன் என்பவர் அலுவலகம் வந்தார். அப்போது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த பயோ-மெட்ரிக் சாதனங்கள், பேட்டரிகள் திருடு போயிருந்தது.
இது குறித்து தெற்கு மண்டல உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், திருட்டில் ஈடுபட்டது குனியமுத்தூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கவுதம்(23) என்பது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

