கோவை: கோவை லங்கா கார்னர் பாலம் அருகே நடைபெறும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை, 24 மணி நேர குடிநீர் திட்டம், சாலை பணிகள் உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் சரிவர போடாததால் விரைவில் சாலை பழுது ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை அருகே லங்கா கார்னர் பாலம் அருகே கடந்த மாதம் 27ம் தேதி முதல் 24 மணி நேர குடிநீர் திட்ட பணிக்காக பிரதான குழாய் இணைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை தோண்டப்பட்டு ஊழியர்கள் பணி செய்வதால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
இதனால் டவுன்ஹாலில் இருந்து கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் சாலையில் செல்பவர்கள் இந்த சாலையில் சென்று வந்தனர். பின்னர் மீண்டும் இதேசாலையில் திரும்பி வர முடியாது. திருச்சி ரோட்டில் இருந்தும் ரயில் நிலைய சாலைக்கு வர முடியாது. சுற்றி தான் செல்ல வேண்டும்.
நேற்று முன்தினம் இரவு முதல் அந்த பகுதியில் மழைநீரை விரைவாக வெளியேற்றும் வகையில் 24 மீட்டர் நீளத்துக்கு வடிகாலுடன் கூடிய ரெடிமேடு பாலம் போடப்பட்டு வருகிறது. மேலும் லங்கா கார்னர் பாலத்தில் பராமரிப்பு பணியும் நடைபெற்று வருகிறது.
இதனால் தினமும் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் தினமும் அணிவகுத்து நிற்கின்றன. இந்த பணிகள் முடிய இன்னும் ஒரு வாரம் ஆகும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பணிகளை விரைவில் முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தி உள்ளார்.



இந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும்.
இந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும்