கோவை:கருத்து சுதந்திரம் குறித்து பேச திமுகவுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். கோவையில் பாஜக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளை தாண்டி வெற்றி பெறும் என்ற உறுதியான நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். கருத்து சுதந்திரம் குறித்து பேச திமுகவுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.
பராசக்தி திரைப்படத்தில் அண்ணாவின் வசனங்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்ட போது, அது அரசியல் கருத்துகளின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டார். மேலும், திமுகவால் பாஜகவை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி தொடர்பாக பேசுகையில், அனைவரும் ஒன்றாக இருந்தால் நல்லது என்பதே என் நிலைப்பாடு. இப்போதும் அதையே சொல்கிறேன் என அவர் தெரிவித்தார். திமுக கூட்டணிக்குள் ஆயிரம் குழப்பங்கள் உள்ளதாகவும், அந்த கூட்டணியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

