கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு தினங்களுக்கு செம்மொழிப் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய பெருவிழாவாகத் திகழும் தைத் திருநாள் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்த்து கொண்டாடும் நோக்குடன் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையால் சென்னையில் சென்னை சங்கம் நம்ம ஊரு திருவிழா நடத்தப்படுவது போன்று ஏனைய 37 மாவட்டங்களில் பொங்கல் கலைவிழா நடத்தப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் உண்மையான பண்பாட்டுச் சிறப்புகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் படுத்துவதோடு பொங்கல் விடுமுறையை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாட பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளதுகிராமிய வாழ்வியல் விவசாய, மரபு பாரம்பரிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்களை நினைவூட்டும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில், செம்மொழி பூங்கா இடத்தில் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை பொங்கல் கலைவிழா கலை நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது.
இவ்விழாவில் பரத நாட்டியம், நையாண்டி மேளம் கரகம், காவடி, தப்பாட்டம், மயிலாட்டம், புரவியாட்டம். தெருக்கூத்து நாடகம் போன்ற பல்வேறு கலை வடிவங்களில் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட உள்ளது.
பொங்கல் கலை விழா குடும்பத்துடன் கூடி பாரம்பரிய கலைகளை ரசித்து மகிழ பண்பாட்டை போற்றி சமூக ஒற்றுமையை வளர்க்கும் ஒரு மேடையாக அமையும் என்றும் தமிழர் பண்பாட்டின் அடையாளமாக பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடனும் உற்சாகமாகக் கொண்டாடி இந்தக் கலைவிழாவிற்கு பொதுமக்கள் திரளாக வருகை தந்து கண்டு ரசிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

