கோவையில் உயர் ரக போதைப் பொருட்கள் பறிமுதல்- 5 பேர் கைது…

கோவை: கோவை மாநகரில் 130 கிராம் மெத்தாம்பெட்டமைன், MDMA பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில், உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில், கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய ஒரு நான்கு சக்கர வாகனம் இடைமறித்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

சோதனையில், அந்த காரில் பயணம் செய்த ஐந்து நபர்களிடமிருந்து 130 கிராம் மெத்தாம்பெட்டமைன் / MDMA வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

விசாரணையில்,அந்த நபர்கள் வெளிமாநிலத்திலிருந்து போதைப்பொருளை வாங்கி கோவை மாநகரில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. மேலும், Google Pay மூலம் பணப் பரிவர்த்தனை செய்து, மொபைல் போன்கள் மற்றும் காரைப் பயன்படுத்தி குற்றச் செயலில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில், 130 கிராம் போதைப்பொருள், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார், ஐந்து மொபைல் போன்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக, ஐந்து நபர்கள் மீது NDPS Act பிரிவு 8(c) r/w 22(c), 25 மற்றும் 29(1)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கோவை மாநகரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp