கோவை: சில்லறை தருவதாக சூப்பர் மார்க்கெட்டில் நூதன மோசடி செய்து ரூ.ரூ. 22 ஆயிரத்துடன் தப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் சம்சுதீன் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த 29ம் தேதி மதியம் 1 மணியளவில் அங்கு வாடிக்கையாளர் போல் ஒரு நபர் வந்தார்.
அவர் பொருட்களை வாங்கி விட்டு உரிமையாளரிடம் என்னிடம் ரூ.22 ஆயிரத்திற்கு ரூ.10, ரூ.20 போன்ற சில்லறை நோட்டுகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார். சில்லறை தேவைப்பட்டதால் உரிமையாளர் ரூ.22 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நபர் தான் தற்போது பணத்தைக் கொண்டு வரவில்லை. கடை ஊழியரை தன்னுடன் அனுப்பி வையுங்கள், அவரிடம் பணத்தை கொடுத்து அனுப்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய சம்சுதீன் கடை ஊழியர் ஒருவரை அவருடன் அனுப்பி வைத்தார். ஊழியரை பைக்கில் ஏற்றிக் கொண்ட அந்த நபர் சற்று தூரத்தில் இருந்த பெட்ரோல் பங்க் அருகே சென்றவுடன், அங்குதான் பணம் உள்ளது எடுத்து வருகிறேன் என கீழே இறங்குமாறு ஊழியரிடம் தெரிவித்துள்ளார்.
ஊழியரும் பைக்கில் இருந்து இறங்கினார். அப்போது அந்த நபர் பைக்கில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் பதறிப்போன ஊழியர் கடை உரிமையாளரிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கரும்புக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து சில்லரை தருவதாக ஏமாற்றி நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர்.
சூப்பர் மார்க்கெட்டில் அந்த நபர் இருந்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவியது. அந்த காட்சிகளின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டது சூலூர் செஞ்சேரிமலையைச் சேர்ந்த மிக்ஸி, கிரைண்டர் பழுது பார்க்கும் ஊழியர் நவாஸ்கான் (43) என்பது தெரிய வந்தது.
போலீசார் அவரை இன்று கைது செய்தனர்.