கோவை: பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டவர்களிடம் பறிமுதல் செய்த நகை மற்றும் பணத்தை கையாடல் செய்த புகாரில் போலீஸ் எஸ்.ஐ கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பொள்ளாச்சியில் மனநலம் குன்றிய இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதில் மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த நகை மற்றும் பணத்தை நவநீதகிருஷ்ணன் பறிமுதல் செய்துள்ளார்.
பறிமுதல் செய்த 18 பவுன் நகை மற்றும் பணத்தை நவநீதகிருஷ்ணன் பதுக்கியுள்ளார். இந்த விஷயம் உயரதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இந்த நிலையில், நவநீதகிருஷ்ணனை கைது செய்ய காவல் அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், இன்று அவரை போலீசார் கைது செய்தனர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து போலீஸ்காரர் ஒருவரே நகை, பணத்தை கையாடல் செய்து, தற்போது கைதாகியுள்ள சம்பவம் சக போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.