கோவை: தக் லைஃப் பட விழாவில் கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் தனது கடிதத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் கர்நாடக ஐகோர்ட் கூறியுள்ளது.
தக் லைஃப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “தமிழில் இருந்து பிறந்த கன்னட மொழி போல” என்று பேசினார். இதற்கு, கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கமல் கன்னட மொழியை அவதூறாக பேசியதாகவும், கன்னடர்களை புண்படுத்திவிட்டதாகவும் கூறிய கர்நாடக அரசியல் அமைப்புகள், இதற்கு கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் ஓடாது என்று கூறி பிரச்சனை செய்து வருகின்றனர்.
தக் லைஃப் படத்தை வெளியிட்டால், திரையரங்கைக் கொளுத்துவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
மன்னிப்பு கேட்க முடியாது

இதனிடையே, நான் அன்பில் பேசிய வார்த்தைகள். அன்பு மன்னிப்பு கேட்காது என்று கமல் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். கமல் மன்னிப்பு கேட்பார் என்று அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்குச் சென்றது.
இந்த வழக்கை விசாரித்தவர் நீதிபதி நாகபிரசன்னா. வழக்கு விசாரணையின் போது நீதிபதி, “வரலாற்று ஆய்வாளரா நீங்கள்? மொழியில் வல்லுநரா நீங்கள்? எதன் அடிப்படையில் தமிழிலிருந்து கன்னடம் தோன்றியது என்று பேசினீர்கள்? பிறரைப் புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. மொழி குறித்து தன் பேச்சுக்கு கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று நீதிபதி கூறினார்.
இரு தரப்பு வாதத்திற்குப் பின் கமல் சமர்ப்பித்த கடிதத்தில் மன்னிப்பு கேட்கவில்லை. தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும், தவறாகப் புரிந்து கொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்பது என்றும் கமல்ஹாசன் தரப்பு வாதத்தை முன் வைத்தது.
மன்னிப்பு எங்கே?
கமல் கடிதத்தில் திருப்தி உள்ளது ஆனால், அதில் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையில் இல்லை அதனைச் சேர்க்க வேண்டும். மன்னிப்பு கேட்பதில் கமல்ஹாசனுக்கு அப்படி என்ன ஈகோ? கமல் கன்னட மொழியை மதிக்கிறார் என்பதை ஏற்கிறோம். ஆனால், அதில் மன்னிப்பு என்கிற வார்த்தையே இல்லையே. மன்னிப்பு கேட்கச் சொன்னால் ஏன் சுற்றி வளைத்துப் பேசுகிறீர்கள் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

இதனிடையே, தாங்களே தக் லைஃப் பட வெளியீட்டை தள்ளி வைப்பதாக கமல் தரப்பு கூறியது. அதற்கு பதிலளித்த நீதிமன்றம், “கர்நாடக ஃபிலிம் சேம்பர் கர்நாடகா அரசு கமல்ஹாசன் திறப்பு இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஃபிலிம் சேம்பர் உடனான பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படும் வரை தக்ளிப் கர்நாடகாவில் வெளியிடப்படாது.” என்று கூறியது.
மேலும் இவ்வழக்கு விசாரணை ஜூன் 10ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தது.
இந்த விவகாரத்தைத் தமிழக அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் கையில் எடுத்துள்ளனர். கமல் மன்னிப்பு கேட்கக்கூடாது என்றும் கூறி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
ஒருத்தரோட பிரச்சனை இல்லை
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “கமலை படித்து விட்டு பேசுங்கள் என்கிறீர்கள், படித்ததால் தான் அவர் பேசுகிறார்.
காவிரியில் தண்ணீர் விடும் பிரச்சனையில் எங்கள் மக்களை அடித்து விரட்டப்பட்டனர். மூட்டை முடிச்சுகளுடன் எங்கள் மக்கள் கர்நாடகத்திலிருந்து வெளியேறினர். இங்கும் கன்னடர்கள் உள்ளனர். நாங்கள் எதிர்வினையாற்றவில்லை. அதுவே எங்களுடைய மாண்பு.

இந்த விஷயத்தில் ஒருவர் மன்னிப்பு கேட்கிறதாக நினைக்கிறீர்கள். மன்னிப்பு கேட்டால் அது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்ட அவமானமாகும். நமது வரலாற்றை பொய் என்பதற்குச் சமம் ஆகிவிடும்.
இந்த இடத்தில் கமலை தனி ஒருவராகப் பார்க்க முடியாது. கமல் மன்னிப்பு கேட்கவே கூடாது. கேட்கவும் விடமாட்டோம்.
உன் மீது வைக்கப்படும் விமர்சனம் உண்மை இல்லை என்றால் உனக்கு எதற்குக் கோபம் வருகிறது? இல்லை என்று கூறிவிட்டுப் போக வேண்டியது தானே.
இந்த விஷயத்தில் மலையாளிகள் உளச்சான்று படி ஒப்புக்கொள்வார்கள். தமிழ் தான் மலையாளத்தின் தாய் மொழி என்பார்கள்.
உங்களுக்கு எங்கள் மீது வன்மம். அமெரிக்க, சீன படங்கள் ஓடும். ஆனால் தமிழ்ப் படம் ஓடாது என்றால் என்ன அர்த்தம். இங்கே ஓடுகிறதே கன்னட படங்கள். ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறதா? எதற்கெடுத்தாலும் இங்கு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று கூறுகிறார்கள். தமிழகத்திலும் கன்னர்கள் வாழ்கிறார்களே அதை மறந்துவிடக்கூடாதே.
இந்த விஷயத்தில் தி.மு.க என்ன செய்கிறது என்று கேட்டால் என்னை மொழி வெறியன் என்று சொல்வார்கள்” என்றார்.