சென்னை: சென்னையில் வரும் நாட்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 38.2 டிகிரி செல்சியஸ், மீனம்பாக்கத்தில் 38.1 டிகிரி செல்சியஸ் என அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ஜூலை 14 முதல் 19 வரை சென்னை மாநகரில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) அன்று வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை அன்று இடியுடன் கூடிய கனமழை அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வாரம் முழுக்க குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையும், அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.