கோவை: சுதந்திர தினத்தில் கோவையில் சுதந்திரமாக மது விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டின் 79வது சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு மதுக்கடைகள் விடுமுறை விடப்பட்டிருந்தது. மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
போலீசார் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணித்தனர். ரோந்து சென்று சோதனை செய்ததில், வெறைட்டிஹால் ரோடு, காட்டூர், போத்தனூர், பீளமேடு சரவணம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் சிலர் மதுவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்து 189 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோவையில் இதேபோல் பல்வேறு இடங்களில் மதுவிற்பனை சுதந்திரமாக நடைபெற்ற நிலையில், 8 பேரை மட்டும் போலீசார் கைது செய்து கணக்கு காட்டியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



