Header Top Ad
Header Top Ad

நவீனத்தின் முதுகெலும்பு… செமிகண்டக்டர் என்றால் என்ன? கோவைக்கு கிடைக்கப்போகும் வரப்பிரசாதம்…!

கோவை: உலகளவில் நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முதுகெலும்பாக “செமிகண்டக்டர்” திகழ்கிறது. செமி கண்டக்டர் என்பது என்ன? அதன் பயன்பாடு என்ன? இதனால் கோவைக்கு என்ன பயன்? என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

செமிகண்டக்டர் என்பது மின்சாரம் செல்லக் கூடிய “கண்டக்டர்” (Conductor), மின்சாரம் செல்லாத “இன்சுலேட்டர்” (Insulator) ஆகியவற்றுக்கு மத்தியில் இருக்கும் தன்மையுடைய பொருள். இதனால் தேவைக்கேற்ப மின்சார ஓட்டத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. சிலிகான் (Silicon) தான் அதிகம் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர்.

Advertisement

சுலபமாகச் சொல்ல வேண்டும் என்றால், இதனை வைத்து சிப் (Chip) தயாரிக்கப்படுகிறது. இந்த சிப்-கள் தான் கணினிகள், ஸ்மார்ட்போன்கள், லாப்டாப்புகள், டெலிவிஷன், கார்கள், செயற்கைக்கோள்கள், மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான எலெக்ட்ரானிக் கருவிகளின் இதயம் அல்லது மூளையாகச் செயல்படுகின்றன.

செமிகண்டக்டர் சிப்களில் தான் மைக்ரோபிராசஸர்கள், மெமரி கார்டுகள், சென்சார்கள், பவர் டிரான்சிஸ்டர்கள் போன்றவை அடங்கியுள்ளன.

உதாரணமாக, நாம் தினசரி பயன்படுத்தும் மொபைலில் உள்ள கேமரா, பேட்டரி, ப்ராசஸர் ஆகிய அனைத்தும் செமிகண்டக்டர் சிப் இல்லாமல் இயங்க முடியாது.

அதேபோல், எலக்ட்ரிக் கார்கள், செயற்கை நுண்ணறிவு (AI), 5G இன்டர்நெட், ரோபோட்டிக்ஸ், விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளும் செமிகண்டக்டர் இல்லாமல் இயங்க முடியாது.

Advertisement

இந்தியாவும் தற்போது செமிகண்டக்டர் உற்பத்தியில் பெரிய முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது. உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப தேவைகளை நிறைவு செய்ய இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது.

மொத்தத்தில், செமிகண்டக்டர் என்ற தொழில்நுட்ப மூளை இல்லாமல் நவீன உலகமே இயங்க முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு 33 சதவீத பங்கு வகித்து வருகிறது. அதாவது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எலெக்ட்ரானிக் பொருட்களில் 100ல் 33 நமது தமிழகத்தில் தயாரிக்கப்படுபவை தான். இந்த தயாரிப்புகளுக்கு மூலாதாரம் தான் செமிகண்டக்டர்கள்.

நாட்டில் 4 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதில் ஒன்று தமிழ்நாட்டில் அமைய இருந்தது. அது தற்போது குஜராத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், மாநில அரசே செமிகண்டக்டர் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடி மதிப்பில், “தமிழ்நாடு செமிகண்டக்டர் மிஷன் 2030” என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

மேலும், சென்னை, ஓசூர், கோவை, பல்லடம் ஆகிய இடங்களில் செமிகண்டக்டர் ஆலைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இன்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர் வடிவமைப்பு, சோதனை, உள்கட்டமைப்பு, மேம்பாடு உள்ளிட்ட 5 வகையான திட்டங்கள் இதில் செயல்படுத்தப்பட உள்ளன. அதோடு, இந்தத் துறையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறனை மேம்படுத்த 1,000 பேருக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் காலம் ஏஐ, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையை அதிகம் சார்ந்து இருக்கும் என்பதால் இந்த துறையில் நிபுணத்துவம் பெறுவோருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

வரும் காலத்தில் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும், துறைகளில் ஒன்றான செமிகண்டக்டர் தயாரிப்பில், நிபுணத்துவம் பெற நீங்களும், உங்கள் குழந்தைகளும் கூட தயாராகலாம் வாசகர்களே…

Advertisement

Advertisement

Recent News