கோவை: கோவை ரயில் நிலையத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை இரயில் நிலைய சந்திப்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக்கான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக அலுவலர், கோவை ரயில் நிலைய இயக்குனர் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோயமுத்தூர் மாவட்டத்தில் பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்குக்கான வன்முறைகள் தடுப்பது குறித்து உரிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, வரதட்சணை, பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்குரிய சட்ட பாதுகாப்புகள், குழந்தைத் திருமணங்களை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு தொடர்பாக தெருக்கூத்து நிகழ்ச்சி பி.எஸ் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களால் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.