கோவை: சூலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பீடம்பள்ளி கிராமத்தில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சூலூர் அடுத்த பீடம்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி (50) என்பவர், அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார்.
சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 50 அடிக்குத் தண்ணீர் இருந்துள்ளது.
கிணற்றில் படிக்கட்டுகள் இல்லாததாலும், நீச்சல் தெரியாததாலும் அவர் தண்ணீரில் அங்குமிங்குமாக தத்தளித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியன் தலைமையிலான மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அவரை மீட்புக் குழுவினர் வலை மூலம் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். துரித நடவடிக்கை மூலம் விவசாயி பழனிச்சாமியை காயமின்றி மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

