கோவை: கோவையில் ஆண்கள் தங்கும் தனியார் விடுதியில் லேப்டாப் திருடும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை, காந்திபுரம் இரண்டாவது வீதியில் உள்ள ராஜேஸ்வரி மேன்சன் என்ற ஆண்கள் தங்கும் விடுதியில் அதே பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர் ரமணன் என்பவர் அங்கு தங்கி படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ரமணன் அறை கதவு திறந்து இருந்த நிலையில், ஆழ்ந்த உறக்கத்தில் உறங்கிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ரமணன் தங்கியிருந்த அறைக்குச் சென்று அவர் பையுடன் இருந்த லேப்டாப் எடுத்துச் சென்றார். கண் விழித்து எழுந்த ரமணன் தனது லேப்டாப் உடன் இருந்த பையை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கம் இருந்த அறைகளில் முழுவதும் தேடிய பின்னர் தனியார் தங்கும் விடுதி உரிமையாளரிடம் கூறி உள்ளார்.
பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்று பையை எடுத்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கொண்டு காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் லேப்டாப்பை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். தொடர்ந்து மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் அறைகளில் செல்போன், லேப்டாப்கள் திருடு போகும் சம்பவம் கோவையில் ப் பயிலும் மாணவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

