கோவை: கோவையில் வீட்டின் பூட்டை உடைக்காமல் கதவை திறந்து 130 சவரன் நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஐயப்ப நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்டின். 24ஆம் தேதி கிறிஸ்மஸ் அன்று உறவினர் இல்லத்திற்கு சென்று ஒரு துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு 26 ஆம் தேதி வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது வீட்டின் பூட்டு உடைக்கபடாமலேயே திறக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 103 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் கண்ணப்ப நகர் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த 80 பவுன் நகைகள் மீட்கப்பட்டு கொத்து சாவிகள், ரம்பம், குரடு, ராடு போன்ற பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெபா மார்டின் கடந்த 24ஆம் தேதி அவரது உறவினர் இல்லத்திற்குச் சென்றுள்ளார். துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு 26 ஆம் வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது நகைகள் கொள்ளை அடிக்கபட்டதாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் வீடு உடைத்து திறக்கப்படாமல் சாவியை போட்டு திறந்தது போல் இருந்தது தெரிய வந்தது. எனவே வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் மீது சந்தேகம் எழுந்து சிலரிடம் விசாரணை மேற்கொண்டோம் ஆனால் அவர்கள் இதில் ஈடுபடவில்லை என்று தெரியவந்தது என்று கூறினார்.
2024ல் குனியமுத்தூர் பகுதியில் இதே போன்று இரண்டு வழக்குகள் பதிவாகி இருந்து கண்டுபிடிக்காமல் இருந்தது தெரியவந்ததாகவும் எனவே அப்பொழுது உள்ள சிசிடிவி காட்சிகளையும் தற்பொழுது கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் வைத்து இவரை பிடித்து விசாரணை மேற்கொண்டோம் என்றார். விசாரணையில் குற்றத்தை ஒப்பு கொண்டார் என்றும் அவர் வீட்டில் இருந்து இந்த நகைகள் மீட்கப்பட்டது என தெரிவித்தார்.
இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தற்பொழுது கோவையில் கண்ணப்ப நகர் பகுதியில் வசித்து வருகிறார். ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் அதற்கிடையிலேயே இது போன்ற திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என தெரிவித்தார்.
1993 மும்பைக்குச் சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர் என்றும் 2003 ம் ஆண்டும் கோவையில் இவர் மீது திருட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றும் 2023 இல் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் இதே போன்று கள்ள சாவி போட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சிறைச்சென்று வந்தவர் என குறிப்பிட்டார்.
இவர் கையில் பல்வேறு சாவிகளை வைத்து கொத்தாக வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளில் ஒவ்வொரு சாவியை கொண்டு திறந்து பார்த்து ரம்பங்களைக் கொண்டும் சாவியை சரி செய்து வீடுகளை திறந்து திருடி வந்துள்ளார் என தெரிவித்தார்.
தற்பொழுது அவர் திருடிய நகைகளில் சில நகைகளை அடமானத்திற்கு வைத்துள்ளார் சில நகைகளை வேறு இடத்தில் கொடுத்ததாக கூறி இருக்கிறார் அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

