ஜிடி மேம்பாலத்தில் ஏஐ கேமிரா… வேகத்தைக் குறைக்க திட்டம்… கமிஷனர் பேட்டி!

கோவை: ஜிடி மேம்பாலத்தில் ஏஐ கேமிராக்கள் பொருத்தி வாகனங்களின் வேகத்தைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வேகமாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்காவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று திறந்து வைத்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காவல் ஆணையர் அலுவலகத்தில் சிஎஸ்ஆர் நிதியிலிருந்து குழந்தைகளுக்காக சிறிய பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. இதனை, இங்குள்ள ஊழியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் புகார் அளிக்க வரும் குழந்தைகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தீபாவளி முன்னிட்டு மாநகரில் வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

முக்கிய இடங்களில் பொதுமக்கள் தங்களுடைய உடைமைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று அறிவிப்புகள் செய்து, அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

ஜிடி மேம்பாலம், திறக்கப்பட்ட போது உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொதுமக்களுக்கு வாகனங்கள் செல்லும் வழிகள் தெளிவாக தெரியவில்லை என்றும்,

பாலத்தை பார்ப்பதற்காக கோல்டுவின்ஸ் வரை சென்றுவிட்டு, மீண்டும் திரும்பி பாலத்தில் வந்தபோது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறுநாளே அங்கு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

அங்கு போலீசார் பணியமர்த்தப்பட்டு, சிக்னல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிக்னல்கள் அமைத்த பிறகு போக்குவரத்து நெரிசல் இருக்காது.

அவினாசி சாலை பழைய மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கும் போது, யு டர்ன் உள்ளது. சிக்னல் அமைக்கப்பட்டதும் அந்த் யு டர்ன் அகற்றப்படும். இதன் மூலம் நேரடியாக நீதிமன்றம் நோக்கி பயணிக்கலாம். அதேபோல, அவினாசி சாலை மார்க்கமாக வரும் வாகனங்களை எல்ஐசி சிக்னலில் இருந்து இடதுபுறம் திருப்பிவிடாமல் நேரடியாக அவினாசி சாலையிலேயே செல்ல அனுமதிப்பதற்கான சோதனைகளும் நடைபெற்று வருகின்றன.

கோல்டுவின்ஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக தொட்டிபாளையம் பிரிவு அருகே போக்குவரத்து சிக்னல் அமைத்து, நெரிசலுக்கு தீர்வு காண நெடுஞ்சாலைத்துறையுடன் பேசி வருகிறோம். அங்குள்ள சர்வீஸ் சாலையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், அவினாசி சாலை மேம்பாலத்தில் ஏறு தளம் மற்றும் இறங்கு தளங்கள் உள்ள இடங்களில் அதிகமான அறிவிப்புப் பலகைகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் குழப்பம் தீர்ந்து போக்குவரத்து நெரிசல் குறையும்.

மேம்பாலத்தில் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதைத் தடுக்க, ஏஐ தொழில் நுட்பத்தில் கேமராக்கள் பொருத்தப்படும். பாலத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதற்கு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். அதற்கு மேல் வேகமாக வருபவர்களின் நேரத்தை ஏஐ கேமிரா மூலம் கணக்கிட்டு, கண்காணித்து வழக்குப் பதிவு செய்யப்படும்.

பொதுமக்கள் பாலத்தை எச்சரிக்கையாகவும், வேகத்தை குறைத்தும் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட வேகத்தில் சென்றால் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

இவ்வாறு சரவண சுந்தர் கூறினார்.மேம்பாலத்தில் பொதுமக்கள் 30 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 30 கிலோமீட்டர் வேகத்தை தாண்டி வேகமாக பாலத்தைக் கடந்தால் ஆட்டோமேட்டிக்காக அபராத விதிக்கப்படும்.

Recent News