டில்லி சென்றார் அண்ணாமலை: உறுதியாகிறதா கூட்டணி?

கோவை: அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லி சென்று திரும்பிய நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று டில்லி புறப்பட்டுச் சென்றார்.

2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தி.மு.க கூட்டணி உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை.

இதனிடையே கட்சி நிர்வாகிகளுடன் டில்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்துப் பேசவே இல்லை என்றும், மக்கள் பிரச்சினைகள் குறித்தே பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

இ.பி.எஸ் கூறுவதை ஒரு சிறு குழந்தை கூட நம்பாது என்று அரசியல் கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனிடையே தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று டுவீட் செய்தார்.

இது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியது. பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி உறுதியானால், அ.தி.மு.க-வுக்கு ‘இலையுதிர் காலம்’ தொடங்கிவிடும் என்று பத்திரிகையாளர்கள் நேரடியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அண்ணாமலை இன்று காலை டில்லி புறப்பட்டுச் சென்றார். இன்று அவர் அமித்ஷாவைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டில்லி சென்ற இ.பி.எஸ் அமித்ஷாவிடம் அண்ணாமலை குறித்து புகார் அளித்ததாகக் கூறப்படும் நிலையில், அண்ணாமலை திடீரென டில்லி புறப்பட்டுச் சென்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Recent News

Latest Articles