கோவை: கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா விழா சிறப்பாக நடைபெற்றது.
கோவை பேரூரில் பட்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
குளிர்ச்சி மிகுந்த மார்கழி மாதத்தில் அக்னி பிழம்பான சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் தந்து பக்தர்களை குளிரச் செய்கிறார்.
வருடத்திற்கு ஒரு முறை திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இருக்கும் நடராஜர் – சிவகாமி தாயருக்கு அதிகாலையில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நடராஜர் – சிவகாமி தாயார் காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் சிவன் கோவில்களில் உள்ள நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

