Bank strike tomorrow: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால் வங்கிப் பணிகள் ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை, இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள் நாளை நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் பொதுத்துறை வங்கிகளின் சேவைகள் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தை United Forum of Bank Unions (UFBU) அறிவித்துள்ளது. தொழிலாளர் ஆணையருடன் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய பேச்சில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன.
Bank strike tomorrow

ஏற்கனவே கடந்த சனி, ஞாயிறு மற்றும் இன்று குடியரசு தினம் (திங்கள்) ஆகிய மூன்று நாட்களும் வங்கிகள் விடுமுறையில் உள்ளன. இதனிடையே நாளை வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு காரணமாக தொடர்ந்து, தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காத சூழல் உருவாகியுள்ளது.
இதனால், பொதுத்துறை வங்கிகளில் கிளை சேவைகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. பணம் செலுத்தல், பணம் எடுப்பு, காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட நேரடி வங்கி சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணிகள் நடைபெறாததால் அந்த மையங்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தனியார் வங்கிகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

