சந்திர கிரகணம் 2025: இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் 2025 செப்டம்பர் 7ம் தேதி நிகழ்கிறது.
புவியானது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே வரும் காலகட்டத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது.
பஞ்சாங்கம் மற்றும் வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில் இந்த மாதம் முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
செப். 7ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.56 மணிக்கு சந்திர கிரகணம் நிகழத் தொடங்கும். முழு கிரகணம் இரவு 10.59 மணியளவில் ஏற்பட உள்ளது. இந்த கிரகணம், நள்ளிரவு 1.52 வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும் என்பதால் இதனை ரத்த நிலவு (Blood Moon) என்று அழைக்கிறார்கள்.
இந்த கிரகணம் இந்தியாவில் தென்பட உள்ள நிலையில், இங்குள்ள கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படாது. மேலும், அந்த தினத்தில் கோவில் நடைகள் அடைக்கப்படுகின்றன.
இந்தியா போன்றே, ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்காவின் சில பகுதிகளில் சந்திர கிரகணம் தென்படும்.
9 மணி நேரத்திற்கு முன்பே

பஞ்சாங்கத்தின் படி, கிரகணம் தொடங்கும் 9 மணி நேரத்திற்கு முன்பான காலகட்டம் சூதக காலம் அல்லது எதிர்மறை காலமாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்திலேயே கிரகணத்தின் தாக்கம் தொடங்கிவிடுகிறது.
அதாவது வரும் 7ம் தேதி மதியமே சூதக காலம் தொடங்கிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுவாக கிரகணம் தொடங்கும் 3 மணி நேரத்திற்கு முன்பாக வயிற்றைக் காயப்போடுவார்கள். கிரகணம் முடிந்த பின்னர் புதிதாக சமைத்து உண்பார்கள்.
எனவே சந்திர கிரகணம் நிகழும் நாளன்று இரவு 7 மணிக்கு முன்பாக இரவு உணவை முடித்துக்கொள்வது சிறந்தது. அதன்பிறகு, காலை எழுந்து புதிதாகச் சமைத்த உணவை உட்கொள்ளலாம். பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம்.
சந்திர கிரகணம் பார்க்கலாமா?

சந்திர கிரகணம் என்பது, சூரியனிலிருந்து வரும் ஒளி பூமியின் நிழலால் மறைக்கப்பட்டு நிலவை முழுமையாக அல்லது பகுதியாக இருள் சூழப்படும் வானியல் நிகழ்ச்சி ஆகும்.
இது சூரிய கிரகணத்தைப் போல் கண்களை பாதிக்காத நிகழ்வு என்பதால், இந்த நிகழ்வை பாதுகாப்பாக பார்வையிடலாம்.
என்ன செய்யலாம்?
கிரகண காலத்தில் கோவில்கள் அடைக்கப்படும் சூழலில், வீட்டிலேயே வழிபாடு நடத்தலாம். கடினமான வேலைகளைச் செய்யாமல் இருக்கலாம். தியானம், யோகா உள்ளிட்ட மனதை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்கள், உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்