கோவை: கேத்தரின் அருவி என்ற சுற்றுலாத்தலம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
கோவையில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும், இங்கிருந்து சில மணி நேர பயணத்தில் அற்புதமான சுற்றுலாத்தலங்கள் ஏராளமாக உள்ளன.
நீலகிரி மாவட்டம்
அந்த வகையில், கோவையின் அண்டை மாவட்டமான நீலகிரியே, இயற்கை கொஞ்சும் அழகிய சுற்றுலா மாவட்டமாகும்.

இங்கு ஏராளமான சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும், அதில் சில அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
கேத்தரின் அருவி
அப்படி பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகள் அறிந்திடாத இடம் தான் கேத்தரின் அருவி. இது மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து அரவேணு பிரிவு சாலையில் உள்ளது.
கோத்தகிரியில் இருந்து 7 கி.மீ., தொலைவிலும், குன்னூரிலிருந்து 21 கி.மீ., தொலைவிலும் இந்த அருவி அமைந்துள்ளது. இந்த அருவி பகுதியிலிருந்து அடர்ந்த காடுகளையும், மேட்டுப்பாளையம் சமவெளிப் பகுதியையும் பார்க்க முடியும்.

தேயிலை செடிகள் நிறைந்து காணப்படும் இந்தப் பகுதிக்குச் சென்றால், ஒரு சிறிய டிரக்கிங் செல்வது போன்ற உணர்வைக் கொடுக்கும். நீலகிரி மலைகளில் இது 2வது உயரமான மலையாகும். சுமார் 250 அடி உயரத்திலிருந்து தண்ணீர் அருவியாகக் கீழே கொட்டுகிறது.
பெயர்க்காரணம்
நீலகிரியில் காபி தோட்டத்தை அறிமுகப்படுத்திய கோக்பர்ன் என்பவரின் மனைவி பெயரைத் தான் இந்த அருவிக்கு வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதுண்டு.
கெட்டிஹாட ஹல்லா என்பது தான் இதன் பூர்விக பெயராகும். டால்பின் நோஸ் பகுதியிலிருந்து பார்த்தால் இந்த அருவியை முழுமையாக பார்க்கலாம். இது போட்டோ எடுக்க ஏற்ற இடம் என்றே சொல்லலாம்.
ஏனெனில் பார்க்கும் இடம் எல்லாம் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும்.
கட்டணம்

கேத்தரின் அருவியைச் சுற்றிப் பார்க்க எந்தவித கட்டணமும் கிடையாது. காலை 6 மணி முதல் இரவு 6 மணி வரை மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும். தேவையான குடிநீர் மற்றும் உணவுகளை எடுத்துச் செல்வது மிகவும் நல்லது.
ஏனெனில் கடை உள்ளிட்ட வசதிகள் அங்கு கிடையாது. கொண்டு செல்லும் பொருட்களை எங்கும் தூக்கி எறியக் கூடாது. சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். சீசன் எப்போது?
கேத்தரின் அருவி ஆண்டு முழுவதும் அதன் அழகை வெளிப்படுத்தி வந்தாலும், மழைக் காலத்திற்கு பிறகு சென்றால் மிகவும் சிறப்பானதாகும். கோடைக் காலத்திற்குச் சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.
ஏனெனில் சில சமயங்களில் அருவிக்கான நீர்வரத்து குறைந்து காணப்படும்.
அருகாமை சுற்றுலாத்தலங்கள்
டால்பின் நோஸ், ரல்லியா அணை, சிம்ஸ் பார்க், அரசு தாவரவியல் பூங்கா, அப்பர் பவானி லேக் உள்ளிட்ட இடங்கள் இதன் அருகாமையில் உள்ள சுற்றுலாத் தலங்களாகும்.கேத்தரின் அருவி