கோவை: மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வழக்கில் சந்தேகம் உள்ளதால் அதனைப் பரிசீலனை செய்ய வெண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய கிறிஸ்தவ வாலிபர்கள் இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவையில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் தங்களை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு சிறுமிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர்.
ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அகில இந்திய கிறிஸ்தவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்கத்தினர், இது காழ்ப்புணர்ச்சி காரணமாக புனையப்பட்ட வழக்கு என்றும், அரசு இதனை பரிசீலனை செய்து வழக்கின் உண்மைத் தன்மையை வெளிப்படையாகக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து அகில இந்திய கிறிஸ்தவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனர் ஜோஸ்வா ஸ்டீபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜான் ஜெபராஜ் மீது புகார் அளித்தவர்கள் கடந்த 11 மாதங்களுக்கு முன்பே இதே போன்ற ஒரு புகாரை அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில், தற்போது கைது செய்துள்ளனர். இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஜான் ஜெபராஜ்க்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு பிரச்சனை இருந்து வரும் சூழலில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ஆர்ப்பாட்டத்தை நாங்கள் அறிவிக்கும் போது பல்வேறு தரப்பிலிருந்து எங்களுக்குக் கொலை மிரட்டல் வந்தது. ஜான் ஜெபராஜ் பங்கேற்ற சபையின் உதவியாளர் எட்வின் ரோஸ் என்பவர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்படுமேயானால் அடுத்த கட்டமாக போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.