கோவை: முதல்வர் வருகையை ஒட்டி கோவையில் குறிப்பிட்ட பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் நாளைய தினம் கோவைக்கு வருகை தர உள்ளார். காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் அறிவுலகத்தை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் போத்தனூர் பகுதியில் உள்ள காந்தி மியூசியத்திற்கும் அவர் செல்ல உள்ளார். அது தவிர்த்து கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் திமுக கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார்.
முதல்வரின் வருகையை ஒட்டி அவருக்கு உற்சாக வரவேற்பாளிப்பதற்கு திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் முதல்வரின் வருகையை முன்னிட்டு நாளை முதல் 28ஆம் தேதி வரை குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வரின் பாதுகாப்பு காரணம் கருதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டல பகுதிகளுடன் சேர்த்து லீ மெரிடியன் ஹோட்டல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொது நிகழ்வு நடக்கும் இடமான வெங்கடாபுரம் நீலாம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் நாளை (26.02.2026) காலை 6:00 மணி முதல் (28.02.2026)ஆம் தேதி மாலை 6:00 மணி வரை இந்த பகுதியில் ட்ரோன்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடையை மீறி ட்ரோன் கேமராக்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

