கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கம் திட்டத்தில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அவினாசி சாலை சிட்ரா அருகே சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வகுகிறது. சென்னை, பெங்களூரூ, டெல்லி, மும்பை உட்பட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் நேரடி விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. தினமும் சராசரியாக 28 முதல் 32 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை தினமும் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விமான நிலைய எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் மொத்தம் 627 ஏக்கரில் விரிவாக்க திட்டம் அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கடந்த நிலையில் திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 620 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து எவ்வித நிபந்தனைகளும் இன்றி விமான நிலைய ஆணையகத்திடம் (ஏஏஐ) நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, விமானநிலைய ஆணையகம் சார்பில், முதல்கட்டமாக சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் நிறைவடைந்த பின்னர் அடுத்த கட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
620 ஏக்கர்
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் இடநெருக்கடி அதிகரித்து வருகிறது. தமிழக அரசு ஆர்ஜிதம் செய்து வழங்கியுள்ள 620 ஏக்கரில் முதல் கட்டமாக சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் முடிந்த பின் புதிய வருகை, புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் தொடங்கும்.
பொதுமக்களுக்கு வழிப்பாதை அமைக்க வேண்டியுள்ளதால் திட்டத்திற்கு தேவையான நிலப்பகுதியை சற்று மாற்றி அமைக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தற்போது வழங்கப்பட்டுள்ள 620 ஏக்கரில் 5 ஏக்கரை திரும்ப பெற்று, மீதமுள்ள இடத்தில் விரிவாக்க திடடத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தவிர பணம் பெற்றுக் கொண்டு நிலத்தை வழங்கிய சிலர் தங்களின் இடத்தை காலி செய்ய மறுத்து வருகின்றனர். அதற்கும் தமிழக அரசு உரிய நடவடிககை மேற்கொண்டு வருகிறது.
எனவே, தற்போது சுற்றுச் சுவரை மையமாக வைத்துக் கொண்டு புதிய வருகை, புறப்பாடு கட்டிடம் கட்டுவதற்கான வடிவமைப்பு ஒப்புதல் பெற தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம். விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்.
அது கிடைத்த பின் சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிய வருகை மற்றும் புறப்பாடு கட்டிடம் தற்போது உள்ள விமான ஓடுபாதைக்கு மறுபுறத்தில் அமைக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

