கோவை: கைது செய்து விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் காலை கைது செய்யப்பட்ட நிலையில் மாலை விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய் அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் என்ற அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் அப்பொழுது பத்தாண்டு பணி முடிந்த தகுதியுள்ள பணியாளர்களை 50% சேர்க்க வேண்டும்
அங்கன்வாடிக்கு கோடை விடுமுறை தற்காலிக பணி நீக்க காலத்தில் பிழைப்பூதியம் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தேசிய மருத்துவ காப்பீடு மகப்பேறு விடுப்பு 12 மாதம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இன்று காலை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சுமார் 500 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு முழக்கங்களை எழுப்பினர்.
அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடபடாததால் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தி எப்பொழுதும் நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையில் மாலை சுமார் 5:30 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் திரண்டு மீண்டும் போராட்டத்தை துவக்கி உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள 500க்கும் மேற்பட்டோர் செல்போனில் டார்ச் லைட்டை ஒளிர விட்டு மீண்டும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

