கோவை: ஆட்டோவில் வலம் வந்து இதர ஆட்டோ உள்ள பொருட்களை கொள்ளையடித்து செல்லும் கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோவை மாநகர், சிவானந்தா காலனி புதுப்பாலம் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் கண்ணன் மற்றும் கணேசன் ஆகியோர் தங்களது ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ஆட்டோவில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், அந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தி சுற்றும் முற்றும் நோட்டமிட்டு, கண்ணன் மற்றும் கணேசனின் ஆட்டோக்களில் இருந்து கதவு, பேட்டரி மற்றும் ஸ்டெப்னி டயர் ஆகியவற்றை கழற்றித் தங்களது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அங்கு இருந்து சென்று உள்ளனர்.
மறுநாள் காலையில் வந்து பார்த்த அவர்கள், ஆட்டோக்களின் பாகங்கள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த போது, ஆட்டோவில் வந்த கும்பல் இந்தத் திருட்டை செய்து இருப்பது தெரியவந்தது.
இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து உள்ள காவல் துறையினர், இரவு நேரங்களில் ஆட்டோக்களில் வந்து கொள்ளை அடிக்கும் அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

