கோவை: பேருந்தில் வியாபாரியிடம் பர்ஸ் திருட முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் பாக்குகாரர் வீதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (55). பூ வியாபாரி.
இவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து பூமார்க்கெட்டுக்கு பூ வாங்க வந்தார். பின்னர் பூக்களை வாங்கி கொண்டு பேருந்தில் உக்கடம் சென்றார்.
பேருந்து உக்கடம் வந்ததும் அவர் இறங்கினார். அப்போது அவரது பின்னால் நின்றிருந்த பெண் ஒருவர், அவரது பேகில் இருந்த பர்சை நைசாக திருடினார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சரஸ்வதி சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்ணை மடக்கி பிடித்து விளாசி பர்சை மீட்டார்.
பின்னர் அந்த பெண்ணை உக்கடம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில் சரஸ்வதியிடம் பர்சை திருடியது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா (40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சரஸ்வதி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து துர்காவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

