கோவை: பெத்தநாயக்கனூர் கிராமத்தில் இறந்து போனதாக கூறப்பட்ட முதியவர் உயிருடன் நடந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனூரை சேர்ந்தவர் காளிதாஸ் (38). இவரது தந்தை மருதமுத்து (63). இவர் கடந்த 7ம் தேதி மதியம் தென்சங்கம்பாளையம் சாலை உள்ள அட்டை தொழிற்சாலை அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு, சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.
அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருதமுத்து தனது மகன் காளிதாசின் அலைபேசி எண்ணை மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த முதியவர் மருதமுத்து மருத்துவமனையில் இருந்து தப்பித்து வந்துள்ளார். இந்நிலையில், மருதமுத்து இறந்து விட்டதாகவும் உடலை பெற்றுச் செல்லுமாறு அவரது மகன் காளிதாஸ்க்கு கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தொலைபேசி வாயிலாக தகவல் வந்துள்ளது.
இதையடுத்து உறவினர்கள் அவரை அடக்கம் செய்வதற்காக இடுகாட்டில் குழி தோண்ட ஏற்பாடுகளை செய்துவிட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட பின்னர் ஒரு சடலம் மருதமுத்துவின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலத்தைப் பெற்றுக் கொண்டு ஊருக்கு திரும்பிய உறவினர்கள் சடலத்திற்கு இறுதிச்சடங்குகள் செய்ய பூ பழம் பத்தி மாலை வாங்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் சமத்தூர் கிராமத்தில் மருதமுத்து நடந்து சென்று கொண்டிருப்பதை கண்ட உறவினர்கள் அதை வீடியோவாக எடுத்து மருதமுத்துவின் மகன் காளிதாஸ்க்கு அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து இறுதிச்சடங்கு பணிகளை நிறுத்திய உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்த சடலம் யாருடையது என தெரியாமல் அதிர்ச்சி அடைந்தனர்.
வீடியோ காட்சிகள்
தாத்தா கொடுத்த ஷாக்#coimbatore#coimbatorenews #nccnews pic.twitter.com/24bsd132Z2
— News Clouds Coimbatore (@newscloudscbe) March 11, 2026
பின்னர் சடலம் புதைக்க தோண்டப்பட்ட குழியில் கோழியை கொண்டு புதைத்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, அடையாளம் தெரியாத அந்த சடலத்தை கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க மருதுமுத்துவின் உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.
இறந்துபோனதாகக் கூறப்பட்ட முதியவர் உயிரோடு வந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உயிருடன் வந்த முதியவரால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

