கோவை: தமிழகத்தில் கோடை காலத்தில் அதிக மழை மற்றும் அதிக வெப்பம் பதிவான பகுதிகளை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலான மூன்று மாத கோடை காலத்தில் (92 நாட்கள்) இயல்பை விட 97% கூடுதலாக கோடை மழை பெய்துள்ளது.
இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இயல்பாக 13 செ.மீட்டர் மழை பதிவாகும். ஆனால், இந்தாண்டு 25 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கோடை காலத்தில் கோவை, நீலகிரி உட்பட 31 மாவட்டங்களில் மிக அதிக மழைபொழிவும், 9 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும் பதிவாகியுள்ளது.
கடந்த 8 நாட்களில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தமிழகத்திலேயே அதிகமாக 141 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இரண்டாவது இடத்தில் கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சின்னக்கல்லாரில் 101 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
வெப்பம்
கோடை வெப்பத்தை பொறுத்தவரை கடந்த 3 மாதங்களில் வேலூரில் 16 நாட்கள் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பம் பதிவானது. இந்தாண்டு தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெப்பம் ஏற்பட்டது. ஈங்கு மே15ம் தேதி 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
ஈரோட்டை அடுத்து, வேலூர், கரூர், மதுரையில் அதிக வெப்பம் பதிவானது. சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் ஒரு நாள் கூட வெப்பம் 40 டிகிரி செல்சியசை தாண்டவில்லை.
அடுத்த 5 நாட்களுக்கு எந்த மாவட்டத்திற்கும் கனமழைக்கான எச்சரிக்கை இல்லை.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மே 24ம் தேதி முதல் 26ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் பரவியது. வானிலை மையத்தின் கணக்கீட்டின் படி ஜூன் 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை தென் மேற்கு பருவமழை கணக்கிடப்படும்.
இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பாக 33 செ.மீட்டர் மழை பதிவாகும். இந்தாண்டு இயல்பை விட 110 சதவீதம் என்ற அளவில் மழை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது தமிழகத்தில் இந்தாண்டு 36 செ.மீட்டர் மழை பதிவாகலாம்.
இவ்வாறு அமுதா தெரிவித்தார்.