கோவை: கோவையில் சிவராத்திரியை பயன்படுத்தி சுமார் ஒரு கோடி ரூபாய் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூர் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் மகாதேவ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடையின் அருகிலேயே அவரது வீடு உள்ளது.
இந்நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்துவிட்டு குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடையின் பின்புறமுள்ள ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 70 சவரன் தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கோயிலில் இருந்து திரும்பிய ரமேஷ்குமார் தனது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், கடையினுள் சென்று பார்த்தார்.
அப்போது இந்த கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர் சிங்காநல்லூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மோப்பநாய் மற்றும் தடயவியல் சோதனை நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர்.
தெரிந்தே கொள்ளை?
மேலும் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்துள்ள போலிசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு தற்போதைய நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என தெரிகிறது.
சிவராத்திரிக்கு கோயிலுக்குச் செல்வார் என்று தெரிந்தே இந்த கொள்ளை நடைபெற்றதாக சந்தேகிக்கும் போலீசார் பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

