கோவை: வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக ஏப்ரல் 27ம் தேதி பல வி.ஐ.பி-க்கள் கோவை வருகின்றனர்.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், துவக்கி வைக்கவும் முக்கிய பிரமுகர்கள் வரும் 27ம் தேதி கோவை வருகின்றனர்.
உதகையில் 25, 26ம் தேதிகளில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஆளுநர் ரவி வருகிறார். இதில் பங்கேற்க துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர் கோவை வருகிறார்.
தொடர்ந்து 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு வேளாண் பலகலை நிகழ்வில் அவர் பங்கேற்க உள்ளார். அவரது பயணம் அவினாசி சாலை வழியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் மூன்றாண்டுகளுக்குப் பின் ஏப்ரல் 27ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியைத் தொடங்கி வைக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி அன்றைய தினம் கோவை வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் சரவணம்பட்டி எஸ்.என்.எஸ் கல்லூரியில் நடைபெறுகிறது. வரும் 26, 27ம் தேதிகளில் நடைபெறும் நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோவை மக்களே இந்த நாளில் உங்கள் பயணங்களை முன் கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். இச்செய்தியை கோவை வாசிகளுக்கு பகிர்ந்திடுங்கள்.