கோவை: உலக புவி தினத்தை முன்னிட்டு வீட்டில் வளர்க்கக்கூடிய மூலிகைச்செடிகளை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் தேவையை வலியுறுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணி எவ்வளவு அவசியமானது என்பதை மக்களிடம் எடுத்துரைக்கவும், எதிர்கால சந்ததியினருக்கான நிலையான வாழ்வை உறுதிசெய்யும் வகையிலும், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி உலக புவி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் உலகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் உலக புவி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மூலிகைச் செடிகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
ரேஸ்கோர்ஸ், சாரதாம்பாள் கோவில் எதிரே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மூலிகைச் செடிகளை வழங்கினார்.

இதில், வீட்டில் வளர்க்கக்கூடிய சிறியா நங்கை, நித்திய கல்யாணி, பொடுதலை, கல்லுருவி, மரிக்கொழுந்து, நொச்சி, பூனை மீசை உட்பட 23 வகையான மூலிகைச் செடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கோவை அரசு கலைக்கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி பார்மசி கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.