கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை விமான நிலையம் அருகில் கடந்த நவம்பர் மாதம் 2 ம் தேதி கல்லூரி மாணவி 3 பேரால் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான கருப்பசாமி என்ற சதீஷ், கார்த்திக் என்ற காளீஸ்வரர், மற்றும் தவசி என்ற குணா ஆகிய 3 பேரை போலிசார் சுட்டு பிடித்தனர்.
தற்போது கோவை மத்திய சிறையில் அவர்கள் 3 பேரும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது 50 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்க உள்ளது. இதற்கு இடையே மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர மீது, திருப்பூர், மாவட்டத்திலும் கோவை கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளிலும் கொலை முயற்சி வழிப்பறி திருட்டு உள்ளிட்டவழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளில் சிறைக்குச் சென்று ஜாமீனில் விடுதலையான இவர்கள் கோவை இருகூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து வந்து உள்ளனர். அதன் பிறகு தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.
இவர்கள் மீது கோவை அருகே உள்ள கோவில்பாளையம் காவல் நிலையத்திலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோன்று இருசக்கர வாகன திருட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போடப்படும் குண்டர் தடுப்பு சட்டம் தற்போது இவர்கள் மீது பாய்ந்து உள்ளது.
கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் இதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளார். தொடர்ந்து 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டது.


