கோவை: கோவையில் திமுக சார்பில் துவங்கிய கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்காதீர் சங்கிகளே என்ற பெரிய பேனருடன், உதயசூரியன் வடிவில் நின்று திமுக மாணவரணியினர் முழக்கமிட்டனர்.
கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் “உதய் அண்ணா 48 டிராப்பி – 2025” என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மைதானத்தில் இன்று அந்த கிரிக்கெட் போட்டி துவங்கியது.

இப்போட்டியை திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் “தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்காதீர் சங்கிகளே!” என்ற பெரிய பிளக்ஸ் பேனரை ஏந்தியபடி, உதயசூரியன் வடிவில் நின்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
80 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் போட்டிகள் பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, 13 ம் தேதி, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து பரிசுகளை வழங்க உள்ளனர்.
முதல்பரிசு 2 லட்சம் மற்றும் கோப்பை. இரண்டாம் பரிசு 1 லட்சம் மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட உள்ளது.


