கோவை: நாட்டில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது மத்திய பெட்ரோலிய அமைச்சகம்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரூ.2 உயர்த்தியது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. அதே நேரத்தில், இந்த கலால் வரி உயர்வால், சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலை உயராது என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
இந்த நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுவதால் அரசுக்கு ரூ.41 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு ஈடாக வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உஜ்வாலா திட்டத்தின் கீழ் ரூ.500க்கு விற்பனையான கேஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.550 ஆகவும், மற்ற மானியங்களுடன் வழங்கப்படும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.803ல் இருந்து ரூ.853ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது; கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் பெட்ரோலிய பொருட்கள் விலை குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு இது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.