கோவை: குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் இணைந்து பால் பண்ணை யாத்திரையை நடத்தி விவசாயிகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்த அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்ட தொழில் முனைவோர்கள் கூறியதாவது:
உற்பத்தியில் இந்தியா முதன்மையான நாடாக விளங்குகிறது. ஆனால் கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாக உள்ளது. இந்த உற்பத்தித் திறன் குறைபாட்டை சரிசெய்யும் வகையில், குமரகுரு கல்வி நிறுவனங்கள் ஒரு முன்னோடி முயற்சியை முன்னெடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாடு” என்ற இந்தத் திட்டம், பால் உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளை ஊக்குவிக்கவும் இலக்கு வைத்துள்ளது.
அந்த வகையில் குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் இணைந்து நடத்திய ஆய்வில், தமிழ்நாட்டின் பால் பண்ணை விவசாயிகள் அதிக உற்பத்திச் செலவு, குறைந்த பால் விலை மற்றும் தேவையான இடுபொருட்கள் மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் கிடைப்பதில் உள்ள சவால்களால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் கீழ், 112 ஆர்வமுள்ள தொழில்முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு கால்நடை இனப்பெருக்கம், ஊட்டச்சத்து, கொட்டகை அமைப்பு, விலங்கு மருத்துவம் மற்றும் பால் பதப்படுத்துதல் போன்ற முக்கிய அம்சங்களில் பயிற்சி பெற்றனர்.
இவர்கள் அடுத்த ஒன்பது மாதங்களுக்கு அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு,இப்பகுதியில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உதவி புரிவார்கள்.

மேலும், இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 40க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 6,000 கி.மீ தூரம் பயணித்து, நவீன பால் பண்ணை தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை நேரடியாகக் கண்டறிந்து வருகின்றனர்.
இந்த “பால் பண்ணை யாத்திரை”யில், அவர்கள் கரிம பால் உற்பத்தி, மொத்த தீவனக் கலவை (TMR) முறை, உயர்ரக கால்நடை வளர்ப்பு மையங்கள், ஹைட்ரோபோனிக் தீவன உற்பத்தி, மதிப்புக்கூட்டும் முறைகள் மற்றும் ஒட்டகம், கழுதை போன்ற மாற்று பால் வகைகளின் உற்பத்தி குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இந்த யாத்திரையின்போது, கர்நாடகாவின் அக்ஷயகல்பா கரிம பால் பண்ணை, BAIF நிறுவனம், மகாராஷ்டிராவின் கோகுல் பால் TMR ஆலை, பாராமதியின் பால் சிறப்பு மையம், குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் ராஜஸ்தானின் ஒட்டக ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட 15 முக்கிய நிறுவனங்களுக்கு இவர்கள் சென்றுள்ளனர்.
இது ஒரு பயணமாக மட்டுமின்றி, இந்திய பால் பண்ணைத் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கான அறைகூவலாக அமைந்துள்ளது. இது விவசாயிகளின் கண்ணியத்தையும், கால்நடைகளின் நலனையும், சுற்றுச்சூழலின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு நிலையான பால் உற்பத்தி முறையை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பால் உற்பத்தியில் உலகை இந்தியா வழிநடத்தினாலும், விவசாயிகளின் வளமான வாழ்வு, கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் பசுமையான சுற்றுச்சூழலில்தான் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது என்பதை இந்தத் திட்டம் உணர்த்துவதாகவும் மாற்றத்திற்கான முயற்சிகள் நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் முன்னெடுக்கப்படுகின்றன என யாத்திரை சென்ற தொழில் முனைவோர் தெரிவித்தனர்.