கோவை: கோவை போத்தனூர் தன்பாத் அம்ருத் பாரத் ரயில் சேவை துவங்கியது.
தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் – தன்பாத் இடையிலான அமிர்த பாரத் ரயில் சேவை காணொளி காட்சி வாயிலாக இன்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி போத்தனூர் ரயில் நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. போத்தனூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பண்ணா லால், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தாமோதரன் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து புதிய ரயில் சேவையில் கோவையைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பலர் மகிழ்ச்சியோடு பயணித்தனர்.
இதுகுறித்து பேட்டியளித்த கோவையைச் சேர்ந்த தொழில்துறையினர், தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரமாக விளங்கும் கோயம்புத்தூரை பிற மாநிலங்களோடு இணைக்கும் வகையில் துவங்கப்பட்டுள்ள இந்த அம்ருத் பாரத் ரயில் சேவை தொழில்துறையை ஊக்குவிக்கும் எனவும், தொழில்துறையில் நிலவிவரும் தொழிலாளர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அதிக அளவில் வட மாநில தொழிலாளர்கள் இந்த ரயிலின் மூலம் கோவைக்கு வருவார்கள் எனவும் தெரிவித்தனர். மேலும் இந்த ரயில் சேவை சுற்றுலா போக்குவரத்தையும் மேம்படுத்தும் என தெரிவித்தனர்

