கோவை: தீபாவளி ஷாப்பிங்கிற்காக கோவையில் முக்கிய இடங்களில் கூட்ட நெரிசல் அலைமோதி வரும் நிலையில், திருட்டைத் தடுக்க சாதாராண உடைகளில் போலீசார் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க, கோவை பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை உள்ளிட்ட கோவையின் கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
இதனால் கோவையின் முக்கிய இடங்களில் கூட்டம் அலை மோதி வருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
பொதுமக்களின் கூட்டத்தை சீர்படுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
மேலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து அதில் நின்று கண்காணித்து வருகின்றனர்.

திருட்டு
தற்போது மாநகரின் முக்கிய இடங்களில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாதாரண உடைகளில் சிறப்புக் குழு போலீசார் ரோந்து சென்று வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கடை வீதிகளில் கூட்டத்தைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் ஜேப்படி செய்யும் நபர்களைக் கண்டு பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஒப்பணக்கார வீதி, ராஜவீதி சந்திப்பு, கிராஸ்கட் ரோடு உட்பட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோபுரத்தின் மீது நின்று போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கூட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம், நகை திருடுவதை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் சாதாரண உடையில் கடைவீதிகளில் ரோந்து வந்து கண்காணிப்பார்கள்.

சி.சி.டி.வி., கேமிராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான நபர்களையும் பிடித்து விசாரித்து வருகிறோம்.
மேலும் திருட்டு வழக்கில் கைதாகி வெளியே வந்த நபர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு திருடர்கள் குறித்து ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்கள் குறித்து போலீசாரிடம் தெரிவிக்கலாம். இது தவிர பொதுமக்கள் நடப்பதற்காக சாலையோரங்களில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.




