கோவை: மது பானங்கள் விற்பனையை அதிகரிப்பதற்காகவே தமிழக அரசு கள் இறக்க அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி கோவையில் விவசாயிகள் பானைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பனை மற்றும் தென்னங்கள் இறக்கி விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க விவசாயிகள் ஒருங்கிணைந்து கோவை, சிவானந்தா காலனியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கள் இறக்க பயன்படுத்தப்படும் பானைகளுடன் கலந்து கொண்டனர்.
கள் இறக்க தமிழக அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது போலீசார் பொய் வழக்குப் போடுவதாகக் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், “ஸ்டாலின் அரசு மதுவை விற்பனை செய்வதற்காக இயற்கையாகக் கிடைக்கக் கூடிய கள்ளை விற்பனை செய்யும் நபர்கள் பொய் வழக்குப் போட்டும், பெண் விவசாயிகளைக் கைது செய்தும் வருகிறது.
மேற்கு மண்டலத்தில் தென்னை சாகுபடி குறைந்த அளவில் உள்ளதால் கள் உற்பத்தி செய்தால் மட்டுமே வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியும். கள் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
அண்டை மாநிலங்களில் கள் விற்பனை நடைபெறுகிறது. மது விற்பனைக்காக தமிழகத்தில் மட்டும் கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் கள்ளுக்கு ஆதரவு தெரிவித்தார். தற்பொழுது முதல்வரான பிறகு கள்ளுக்கு அனுமதி தராமல் மறுப்பு தெரிவித்து வருகிறார்.” என்றனர்.