கோவையில் கோடிக்கணக்கில் மோசடி; 9 சொகுசு கார்களுடன் ஆடம்பர வாழ்க்கை; தம்பதி கைது!

கோவை: கோவையைச் சேர்ந்த வாலிபரிடம் ரூ.1.46 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த நீலகிரியைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன். விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மருந்துக் கடை நடத்தும் தம்பதி சிவக்குமார், தாரண்யா மற்றும் சிவகுமாரின் உறவினரான ஹரிஷ் ஆகியோர் இவருக்கு பழக்கமாகினர்.

சிவகுமார் – தாரண்யா தம்பதி சிவகாமி ப்ளோரில் டெக் என்ற பெயரில் அலங்கார மலர்கள் உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாகக் கூறி உள்ளனர்.

நிர்வாகத்தை ஹரிஷ் என்பவர் கவனித்து வருவதாகவும் தங்கள் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டி தருவதாகவும், ஆசை வார்த்தைகளைக் கூறினர்.

அதை நம்பிய சிவராமன் கடந்த ஆண்டு அக்டோபரில் 1.1 கோடி ரூபாய், நவம்பரில் 45 லட்சம் ரூபாய் என 1.46 கோடி ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் லாப பணத்தைக் கொடுக்காததால் சிவக்குமாரிடம், சிவராமன் கேட்டார் அதற்கு அவர் முறையான பதில் அளிக்கவில்லை, தம்பதி ஏற்கனவே பலரிடம் மோசடி செய்ததை அறிந்த சிவராமன் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார், தம்பதியர் கைது செய்து, தலைமறைவான ஹரிசை தேடி வருகின்றனர். மூவரும் சேர்ந்து பலரிடம் 8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்களுக்கு சொந்தமாக இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஒரு லோடு ஆட்டோ, பிஎம்டபிள்யூ, கியா கார்னிவல், டொயோட்டா ஃபார்ச்சூனர் , பென்ஸ் நிறுவன கார்கள் உள்பட ஒன்பது வாகனங்கள் பறிமுதல் செய்து உள்ளனர்.

Recent News

Latest Articles