கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையை சேர்ந்த கலைஞர் ஒருவர் சர்க்கரை வள்ளி கிழங்கை கொண்டு விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார்.
வருகின்ற புதன்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து ஊர்களிலும் ஊர் மக்கள் சார்பிலும் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம்.

முன்பெல்லாம் களிமண்ணினால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்த நிலையில் களிமண் தட்டுப்பாட்டால் பிளாஸ்ட் ஆஃப் ஃபாரிஸ் பயன்படுத்தி விநாயகர் சிலைகளை வடிவமைத்து வருகின்றனர். மேலும் அதற்கு கண்களை கவரும் வண்ணம் பல்வேறு வண்ணங்களும் தீட்டப்படுகின்றன. பல்வேறு மக்கள் வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி முடிந்து அந்த சிலைகளை நீரில் கரைக்கும் பொழுது நீர் மாசடைகிறது. இதனை தடுப்பதற்கு அரசும் கவனம் செலுத்தி வருகின்ற சூழலில் மீண்டும் விதை விநாயகர் போன்ற புதிய முயற்சிகளும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியில் சேர்ந்த UMT ராஜா என்ற கலைஞர் சர்க்கரைவள்ளி கிழங்கு பயன்படுத்தி சிறிய அளவிலான வீட்டில் வைத்து வழிபடும் வகையில் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார். குளங்களை காப்போம், மரம் நடுவோம், பிளாஸ்டர் ஆஃப் ஃபாரிஸை தவிர்ப்போம் என்பதை மையமாகக் கொண்டு இதனை உருவாக்கியுள்ளார்.
சர்க்கரைவள்ளி கிழங்கினால் ஆன விநாயகர் சிலையை வைத்து வழிபட்ட பின்பு இதனை நீரில் கரைக்கும் பொழுது நீருக்கும் மாசு ஏற்படாது அது மீன்களுக்கும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் உணவாக அமையும் என்பதன் அடிப்படையில் இதனை உருவாக்கியுள்ளார்.